Wednesday, July 18, 2012

pinnnokkia ninaivugal.

ராஜேஷ்கன்னா  காலமானார் . 

இது ஏதோ ஒரு ஹிந்தி நடிகனின் மரணசெய்தி என்று   சிலர் எண்ணக்கூடும் .  70களின் யுவன் யுவதிகளை கேட்டுப்பாருங்கள் .  ஹோட்டல்  பெயர்களில்  ராஜேஷ் , அந்த வருடத்தில் பிறந்த குழந்தைகளின் பெயர் ராஜேஷ் . அவர் நடித்த ஆராதனா  படத்தின் பெயர் கூட பல டீக்கடைகளுக்கு வைக்கப்பட்டது.  எங்கெங்கு காணினும் ராஜேஷ் ராஜேஷ். 

1965ல் தீவிரமான ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில்  பங்கு கொண்டவனில் நானும் ஒருவன். 
அந்த போராட்டத்தின் விளைவாகத்தான்  67ல் தி மு க அரசு பதவி ஏற்றது . ஹிந்தி என்று சொன்னாலே அனைவருக்கும் வெறுப்பு .  ஏறக்குறைய ஒரு தலைமுறை  ஹிந்தியை எதிர்த்து இன்றுவரை ஹிந்தி தெரியாமலே இருக்கிறது என்னை போலே . 

ஆனால் ஒரு ஆச்சரியமான முரண் என்னவென்றால் 70களில் வெளியான ராஜேஷ் கண்ணாவின் ஹிந்தி திரைபடங்கள் தமிழகத்தில் மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 
ஆராதனா  ஆனந்த்  அந்தாஸ் போன்ற படங்கள்  தமிழகத்தை ஹிந்தி பக்கம் திருப்பியது.

அவரின் படத்தை பார்க்காதவர்கள் நண்பர்கள்  வட்டத்தில்  கேவலமாக பார்க்கப்பட்டனர் .
இரண்டு வரிகளாவது அவர் படத்தின் பாடல்களை பாடவில்லை  என்றால்  நட்பு வட்டம் மட்டும்  அல்ல  கன்னியரின் கூட்டம்  ஒரு பொருட்டாகவே உங்களை மதிக்காது.  எனது நண்பன் ஒருவன்  ஜிந்தகி ஏக சப்பார்  என்று தப்பு தப்பாக பாடி தன் தோழியை  இழந்தான் என்பது ஒரு கொசுறு செய்தி.  பாடல்களுக்க்கவே  ஹிந்தி கற்றுக்கொண்ட நண்பர்களும் உண்டு.

ஒரு அரசாங்கத்தையே மாற்றக்கூடிய  பலம் பொருந்திய ஹிந்தி எதிர்ப்பு என்னும் ஆயுதம் ராஜேஷ்  கண்ணா வரவிற்கு பின் கூர் மழுங்கியது.  பிற்காலத்தில் ஹிந்தி திரைப்பட மோகத்தில் \இருந்த தமிழனை   மீட்டு வந்தது இளையராஜா  என்பது வேறு கதை .                                        

தொடர்ச்சியாக  15க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை கொடுத்தவர் 
தன்னைவிட  13 வயது குறைந்த  டிம்பெல் கபாடியவை மணந்தவர் . 
இந்தியாவையே தன்னை நோக்கி திரும்ப வைத்தவர் 

என்  பதின் பருவத்தை நினைக்க செய்தவர் .  அவரின் மறைவு  என்போன்றவர்களின்  பல்வேறு எண்ணங்களை அசை போடசெய்துவிட்டது .  ரூப் தேரா   மஸ்தானா  என்ற 
பாடல் ஒலிக்கும் போதெல்லாம்  எங்காவது ஒரு யுவனும் எங்காவது ஒரு யுவதியும் 
ராஜேஷ்கன்னா  என்னும் ஒரு புள்ளியில்  மையப்ப்பட்டிருப்பார்கள்.






     
  




No comments:

Post a Comment