Sunday, December 10, 2017

11-12-1974


சில நாட்கள் நம் நினைவினில் அழுத்தமாக பதிந்திருக்கும் . 11.12.1974 இந்த நாள் என் வாழ்க்கைப்பாதையில்  ஒளியேற்றிய  நாள் . ஆம் அன்றுதான் நான்
ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பணியில் சேர்ந்த நாள்.  அதுவரை சராசரி இளைஞனாக  பாடப்புத்தகங்களை கொஞ்சமாகவும்  மற்ற  புத்தகங்களை நிறையவும் படித்துக்கொண்டும் , திரைப்படங்களை பார்த்துக்கொண்டும்  அரசியலில் ஐயா காமராஜர் வழியில் ஈடுபட்டும் இருந்த என்னை  ஒரு வழியாக  செதுக்கிய  பெருமை  எல் ஐ சி நிறுவனத்தையும்  நான் சார்ந்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தையும் சாரும்.   சரி  11.12 74  அன்று நடந்த நிகழ்வு  ஒரு பார்வையாளனாக இன்று என் கண் முன் விரிகிறது.   

காலை 9.30  மணி  என்னை கையைப்பிடித்து  என் அப்பா சிதம்பரம் கிளைக்கு நான் பணியில் சேர  அழைத்து கொண்டு வருகிறார். சிதம்பரம் என் அம்மாவின் ஊர் என்பதால் ஏற்கனவே எனக்கு பரிச்சயமான ஊர்.  என் தோற்றத்தை பற் றி சொல்லியாக வேண்டும்.. ஒல்லியான  தேகம். போதாக்குறைக்கு  கண்ணியமாக தெரிய வேண்டும் என்பதற்காக  தலை முடி ஓட்ட வெட்டப்பட்டிருந்தது.  ஏராள அறிவுரைகளுடன்  பயமும் வியப்பும் கலந்த தோற்றம்.  என்னை பார்க்க   எனக்கே  என்னை   பிடிக்கவில்லை.

அப்பா  கையில் ஒரு மஞ்ச பை . அதனுள் என் பணி  ஆணை ,. ஸ்டென்சில் பண்ண காகிதத்தில். இப்போதைய  இளைஞர்களுக்கு ஸ்டென்சில் பேப்பர் என்றால் தெரியுமா? 

அலுவலகம் முதல் மாடியில்  . அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தோம் .
சற்று தூரத்தில் எதிரே ஒருவர் அமர்ந்து கொண்டு அன்றைக்கு வந்த அலுவலக தபாலை பிரித்து  அடுக்கி வைத்துக்கொண்டு  அதன் மேல் சிகப்பு மையில் என்னென்னவோ எழுதி எழுதி வைத்தார். அவர் பக்கத்தில் இருவர் ..

இருவரும் டீக்காக உடுத்தி இருந்தனர்.  ஒருவர் சிரித்த முகத்துடனும்  ஒருவர்
சீரியஸாகவும்  அவருடன் கடிதத்தை பார்த்து கொண்டிருந்தனர். 

ஒவ்வொருவராக  அலுவலகம் வந்து கொண்டிருந்தனர். என் அப்பா ஒவ்வொருவருக்கும்  வணக்கம் சொல்லி கொண்டிருந்தார் . சிலர் பதில் வணக்கம் சொன்னார்கள்  சிலர் தலையை மட்டும் அசைத்தார்கள்  சிலர் அந்த வணக்கம் நமக்கல்ல  என்ற ரீதியில்  சென்றனர்.  ஆனால் ஒருவர் கூட எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று  கேட்கவில்லை. 

ஒருவர் உள்ளெ நுழையும் போதே மாப்பிளே  நேத்து என்னாச்சி தெரியுமா  என்று  கேட்டுக்கொன்டே வந்தார். மலர்ந்த சிரிப்பும் வாய் நிறைய வெற்றிலையும்  ஜிப்பா  வேஷ்டியுடன் வித்தியாசமாக இருந்தார்.
போகும்போதே யார் இந்த கொழந்தை என்று சொல்லியவாரே  போனார்..  அவர் பெயர்  ABS  என்று அறிந்தேன்.  அப்போதே நான் வடிவேலு மாடுலேஷனில்  என்னது குழந்தையா என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன் .

அடுத்து வேஷ்டி சட்டையுடன்  கையில் புத்தகங்களுடன்  ஒருவர். புத்தகங்கள்  எல்லாவற்றிலும் சிவப்பு அட்டை. அரிவாளுடன் படங்கள். புரிந்து விட்டது  எப்போது சீனா இந்தியா மேல படையெடுத்தது அப்போதிலிருந்து சிவப்பு எனக்கு அலர்ஜி .(இன்று வரை) இவருடன் வேலை என்று நினைக்கும்போதே  பயமாய் இருந்தது.  இவர் பெயர்  RBS.

அடுத்து  கல்லூரி கதவை திறந்தது போல் வரிசையாய் இளைஞர்கள் .எனக்கு மிகவும் சந்தோசம்  . அவர்கள் அனைவரும்  எனக்கு சில மாதங்களுக்கு முன் பணியில் சேந்தவர்கள் .

மணி பத்து : அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து பணியை தொடங்கினர். அரசு அலுவலகத்தில் சரியான  நேரத்திற்கு  யாரும்  வரமாட்டார்கள்  என்கின்ற  பேச்சு  சரியில்லை என்பதை  அன்று உணர்ந்தேன்.

நானும் என் அப்பாவும்  அதிகாரியை நோக்கி சென்றோம் . அப்போது கடைசி தபாலை பிரித்து  பக்கத்தில் இருந்தவர்களிடம்  அவர்  இன்னைக்கு ஒருத்தர் பாண்டிச்சேரியில் இருந்து பணியில் சேர்வார் என்று லெட்டர் வந்திருக்கு  என்று கூற , அவர்கள்   பாண்டிச்சேரியிலிருந்தா ?? எந்த மாக்கான் வரப்போகுது ,நிதானமா இருக்குமா  என்று சொல்லிக்கொண்டே  என்னைப்பார்த்து  யார் என்று கேட்க ...    நான்தான் அந்த  மாக்கான்  நிதானமாத்தான் வந்திருக்கான் என்று சொல்ல  என் அப்பா என் கையை பிடித்து இழுத்தார். அவர்கள் மூவரும் இதை எதிர்பார்க்காததால் சற்றே நிதானித்து உடனே  வெல் கம்  என்றார்கள்.  சில நிமிடங்களிலேயே  மிகவும் பரிச்சயமாகி விட்டார்கள் . என் அப்பாவை அமரச்சொல்லிவிட்டு  என்னை ஜாய் னிங் ரிப்போர்ட் தர சொன்னார்கள் .  நான் திரு திரு என்று முழிக்க  RBS .
என்பவர் தானே  டைப்  செய்து   இரண்டு கடித்தை கொடுத்தார்.  முதல்  கடிதத்தை பார்த்தவுடன் எனக்கு பயங்கர அதிர்ச்சி.  ஏனென்றால் அது சங்கத்தில் சேருவதற்கான  கடிதம் .  இரண்டாவது என்னுடைய ஜாய் ய்னிங்
கடிதம். . என் தயக்கத்தை  புரிந்து  கொண்ட  அவர்கள் என்னை  சமாதானம் செய்து  கையொப்பம் பெற்றார்கள்.  ஜாய்நிங்  ரிப்போர்ட் கொடுப்பதற்கு முன்  சங்கத்தில் சேர்ந்த பெருமை எனக்கும்கூட கிடைத்தது. 

பிறகு ஒவொருவராக எனக்கு அறிமுகம் செய்தார்கள்.  அதில் ஒருவர்  மிகப்பெரிய மீசையுடன்  படு பந்தாவாக  இருந்தார். ஒரு ஊழியர் என் காதில் ரகசியமாக இவரை அனுசரித்து போ அவர் இந்த பகுதிகாரர்  என்றார். . அப்போது  ஒரு சுவாரஸ்யம் . எனது மாமா நான் வந்திருப்பதை அறிந்து  என்னை பார்க்க அலுவலகம் வர  அந்த பந்தா மீசை  ஆசாமி ஓடி போய்  என் மாமாவை வரவேற்க  எங்க அக்கா பையன்தான் அது என்று என்னை நோக்கி சொல்ல  உடனே  தம்பி சொல்லவேயில்லையே  என்று சொல்லி  என்னுடனே வந்தார் . அவர் பந்தா சற்று குறைந்திருந்தது. காரணம் எங்க மாமா வி ன் ஊர் சிதம்பரம் அருகே  உள்ள கவரப்பட்டு கிராமம் . ஆம் வாண்டையார் கிராமம்தான் . நானும் அவர்  பார்வையில்  உள்ளூர்காரன் .ஆகிவிட்டேன் .

முதலில் இருவரை பற்றி சொன்னேன் அல்லவா . அதில் ஒருவர்  ரவீந்திரன் என்கிற ரவி  இன்னொருவர்  வேதா  என்கின்ற வேத ராமன்..  இன்று வரை என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள். . 

சிதம்பரம் எல் ஐ சி கிளை  நண்பர்கள் அனைவரும் எனக்கு ரோல்  மாடெல்கள் .பாசமுடன்  என்னை அண்ணாச்சி என்று அழைக்கும்  சிங்காரவேலு சார் , படி
மார்க்சிசம் படி என்று  என்று மார்க்சிசம் படிக்க வைத்த வேலுசாமி சார்,
தன்  கடைசி காலம் வரை எனக்கு ஆசானாகவும் வழிகாட்டிய  RBS  அவர்கள் ., அப்போதே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவி ரமாக இருந்த  ரமணன்,,
அன்றைய  காங்கிரஸ்  இடதுசாரி எதிர்ப்பு நிலை கொண்ட ஜெயராமன் , நான் அன்போடு வாத்தியாரே என்ற அழைக்கும்  சுப்பாராயான் அவர்கள் (தற்போது  இடதுசாரி)   அமைதியான வயதில் மிக இளையவரான உத்திராபதி , வட்டார வழக்கில்  ராஜ் நாராயனையே  மிஞ்சும்  பாலசுப்ரமணியன் என்னும்  PBS
குட்டி சாய்  என்று என்னை அழைக்கும்  அப்போதைய நவீன இளைஞன் கல்யாணராமன்  ஸ்ரீரங்கத்து ஆசார ரங்கராஜன் , என் போல் சினிமா மோகம் கொண்ட சேகர்  ஆசிரியராக இருந்து எல் ஐ சிக்கு வந்தபின்பும் ஆசிரியர் போல்  குணம் கொண்ட V.V.   என்று அத்தனை பேரையும் நினைத்து பார்க்கிரேன் .

இன்று அனைவரும் வெவேறு ஊர்களில்  வெவ்வேறு பதவிகளில் வெவேறு  சூழ்நிலையில் . ஆனால் எங்கள் அனைவரையும்   ஒருங்கே  இணைப்பது   சிதம்பரம் கிளையில் பணி  புரிந்த மகிழ்வான நாட்களும்  எங்களை சரியாய் வழிநடத்தி சென்ற  எங்களது பெருமைக்குரிய சங்கமான  AIIEA வும் தான். .

பழைய நெனைப்புடா பேராண்டி பழைய நெனைப்புடா. ..