Thursday, June 23, 2016

kannadasan

தன்  எழுத்தால் தணிக்கை குழுவை  வென்றவர் ==

கண்ணதாசன்  பாடல்களில்  அவரின் வார்த்தை நயங்கள்  தணிக்கை குழுவையே திகைக்கவும்  ரசிக்கவும்  செய்திருக்கிறது. 

கண்ணதாசன்  திமுகவில்  இருந்த நேரம் . அன்றைய காலகட்டத்தில்   அண்ணா  திமுக  உதயசூரியன்  போன்ற வார்த்தைகள் பாடல்களில்  இடம் பெறுவதை   தணிக்கை துறை  ஏனோ  அனுமதி மறுத்தது.  ஆனால்  
 கவிஞர் அவர்களோ  தன் சொல்வன்மையால் அதை இடம்பெறச்செய்தார். 

ராணி சம்யுக்தா  என்றொரு  படம்.  அதில் ஒரு  பாடல் ==

        இதழ்  இரண்டும்  பாடட்டும்       இமை இரண்டும் மூடட்டும் 
         உதய சூரியன்  மலரும்போது  உனது  கண்கள்  மலரட்டும். 

தணிக்கை குழுவுக்கு எப்படி உதயசூரியனை  வார்த்தையை  நீக்குவது என்று திகைத்து  அதை அனுமதித்தனர்  என்பது  அன்றைய  செய்தி. (மனதிற்குள் அவர்கள்  அதை ரசித்தார்கள் என்பது  வேறு விஷயம் }

பாவாடை  தாவணியில்  பார்த்த உருவமோ  இது பூவாடை  வீசி வர பூத்த பருவமா .  என்ற  பாடல் வரிகளை  அனுமதிக்கலாமா  என்று விவாதம் நடந்ததாக  சிலர்  பேட்டிகள்  கூட  அளித்தனர். 

பாசமலர் திரைப்படத்தில்   வாராயோ தோழி  வாராயோ  மணப்பந்தல்  காண வாராயோ  என்ற பாடல்  ஒவ்வொரு  திருமண வீட்டிலும்  இந்த பாடல் நிச்சயமாக இடம்பெறும்.  தணிக்கை  குழு  விமர்சித்து வியந்து ரசித்து  அனுமதி அளித்த பாடல்  வரிகள்  எது  தெரியுமா ==

  மலராத  பெண்மை  மலரும்  முன்பு புரியாத உண்மை தெரியும் 
  மயங்காத கண்கள்  மயங்கும்  முன்பு விளங்காத கேள்வி விளங்கும் 
  இரவோடு நெஞ்சம் உருகாதோ  இரண்டோடு  மூன்றும் வளராதோ =
  (இந்த பாடல்  காட்சியை  காண நேர்ந்தால்  நடிகர் திலகத்தின்  முக பாவனையை பாருங்கள்  )

இதோ இன்னொரு பாடல் வரிகள்    வாழ்கைபடகு  படத்தில்  --
தணிக்கை குழுவினர்  இந்த வரிகளை கடுமையாக எதிர்த்ததாகவும்  பின்  மறைபொருளாகவும்  வார்த்தை நயமும் உள்ள காரணத்தால்  அதை அனுமதித்தனர்  என்பதும் பின்னர்  நான் அறிந்த செய்தி.  அது என்ன வரி தெரியுமா

சின்ன சின்ன கண்ணனுக்கு  என்னதான் புன்னகையோ  என்ற பாடலில் வரும்
 வரிகள் ===  ஒருவரின்  துடிப்பினிலே விளைவது  கவிதையடா     இருவரின் துடிப்பினிலே  விளைவது  மழலையடா   ஈரேழு மொழிகளிலே  என்ன  மொழி பிள்ளை மொழி ====

இம்மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம் . கண்ணதாசனே  இலக்கியத்தை எளிமையாக்கி  என் போன்றோருக்கு சுவையாக பரிமாறிய  காலத்தை வென்ற கவிஞனே  உம்மை என்றும்  நினைவு கொள்வோம்.
     


Friday, June 10, 2016

ஒரு நாள்  கூத்து ====== திரைப்பார்வை

மூன்று பெண்களின்  கதை . சமீப  காலமாக  பெண்களை முன்னிறுத்தி  பெண்ணியம்  பேசும்  கதைகள் வந்ததில்லை.  அப்படி சில படங்கள் வந்திருப்பதாக  சொன்னால்  அவை  பெண்ணிய  படங்களே  அல்ல.

தெளிவாக,  அழகாக , அந்த மூன்று பெண்களின் குடும்பத்தில் நாமும்  ஒரு பார்வையாளாராக  நம்மை  கட்டி போட்டதே  இயக்குனரின்  வெற்றி.
என்ன  ஒரு  அளவான நடிப்பு.

எனக்கு டைரக்டர்  ஸ்ரீதர் ,  பாலச்சந்தரின்  படங்களை   தற்கால  சூழலில்  பார்ப்பது  போன்ற  உணர்வு  ஏற்பட்டது.  கடைசி காட்சியில்  வீட்டை விட்டு வெளியேறிய பெண்  திரும்ப வீட்டுக்கு  வரும்போது , அனைவரும்  அவளை பார்க்கும்போது   இப்ப  என்னாச்சி என்று  தண்ணீரில்  முகத்தை கழுவும்போது   ஜெயகாந்தன் நினைவுக்கு  வந்தார்.

.. தலைமுறை காரணமாகவோ  என்னவோ   என்னால் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் காட்சியை (ஆபாசமற்று இருந்தாலும்) ஏற்க முடியவில்லை..

மற்றபடி  அத்தி  பூத்தது போல்  ஒரு  கதையின்  போக்கிலேயே  பெண்ணியம்  பேசும்    நல்ல  படம் . 

Saturday, June 4, 2016

முஹமது  அலி   காலமானார்.

எழுபது  எண்பதுகளில்  நாங்கள்  வியந்து   பார்த்த  பிரபலங்கள்   ,   மெக்கன்ரோ ,  போர்க் (borg)  ப்ரூஸ் லீ   ஸ்டெப்பி  கிராப் ,  BONEY M    BEATLES, பிரேசிலின்  பெலே   போன்றவர்கள் .  அவர்களில்  ஒருவர்  காஸ்யுஸ் கிளே  அதாவது  முஹம்மத்  அலி .

குத்து சண்டையில்  உலக புகழ் பெற்றவர்.  அதனிலும்  மேலாக  அமைதியை  விரும்புபவர்.   வியட்நாம் போரை  எதிர்த்தவர் .. மரணம் இயல்பானதுதான்.  ஆனால் நமக்கு வேண்டியவரோ  அல்லது  நாம்  ஆராதித்த  அந்த  கதாநாயகர்களோ  காலாமாகும்  போது  அந்த சோகம்  நம்மை கேளாமலேயே  நமக்கு  தொற்றி கொள்கிறது .  

அலி  அவர்களே  உங்கள்  வாழ்க்கை சுற்றின்  இறுதி  மணி  அடிக்கப்பட்டுவிட்டது. நிம்மதியா  போய்  வாருங்கள் . உங்களின் அவ்வுலக  பயணம் இனிதாகட்டும். .