Sunday, August 2, 2015

friendship day

நட்பு  உறுதியானது அல்ல -  அது ஒரு நீர்க்குமிழி ===

பிடிக்காதவர்கள் படிக்காதீர்கள் --

நண்பர்கள் தினம் . நம் வாழ்க்கையில்  எத்தனை நண்பர்களை சந்தித்து இருப்போம் . ஒவ்வொரு கால கட்டத்தில்  ஒவ்வொரு உயிர  நண்பன்  இருந்திருப்பான். இங்கு நான் நண்பன்  என்று  நண்பர் என்று குறிப்பிடுவது  ஆண் பெண் இரு பாலரையும்தான் .
 என் அனுபவத்தில் இருந்தே கூறுகிறேன் .

பள்ளி நாட்களில் முக்கியமான  கட்டத்தில் ஜாமெட்ரி பாக்ஸ்  கொடுத்தவன் உற்ற நண்பனாகினான் . இருவரும் ஒன்றாகவே சுற்றினோம்  காக்கா கடி கடித்து  கமர்கட் சாப்பிட்டோம்   வருடங்கள் ஓடி  வகுப்புகள் மாறியபோது
வேறு ஒரு  நண்பன்  அவனுக்கு ஏதோ உதவி செய்ய போக  அவன் என்னை உயிர் தோழனாக கருதினான்.  இருவரும் வகுப்பை  புறக்கணித்து  திரைப்படம்  பாப்போம்   சில நாட்கள் அவன் வீட்டில் சென்று நான் படிப்பேன் . அவன் என்வீட்டில் வந்து சில நாள் படிப்பான்   தெருவே எங்கள் ஒற்றுமையை கண்டு வியந்து பேசும் ..இதுதான் நட்பு என்று நினைதேன்

அடுத்து  கல்லூரி  அங்கு மூன்று நண்பர்கள்  . நாங்கள் நால்வரும்  ஓர் அணியாகவே சுற்றுவோம் . பெல் பாட்டம்  சைடு  கிருதா   ஒரே
 மாதிரி  உடைகள் . அவரவர்  வீடுகள் வேறு வேறு பகுதியில் இருந்தாலும் , ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி ஒன்றாகத்தான்  வருவோம் போவோம் . அட் இதுவல்லவோ நட்பு  என்று புளகாங்கிதம்  அடைந்தேன்.

அடுத்த கட்டம்  சற்று முதிர்ந்த மன நிலை கொண்ட பருவம் . இதில்தான்
எத்தனை அனுபவங்கள். ஏராளமான  உற்ற நண்பர்கள்  கிடைத்த பருவம் இது.
சில நண்பர்களுடன் தனியாக எடுத்த படங்கள்  ஒரு கனவு போல் இருக்கிறது .
சிலர் பெயர்கள் எனக்கு மறந்து கூட விட்டது. அந்த நண்பர்கள் எனது நெருங்கிய நண்பர்கள்  அந்த கால கட்டத்தில்.

 நண்பனின் திருமணத்திற்கு செல்வது, திருமண வேலைகளில் உதவிகரமாக இருப்பது , திருமணத்திற்காக  நண்பர்கள்   மனமகனான நண்பனின் வீட்டிற்கு .வெள்ளை அடிக்கும் பொறுப்பை கூட  ஏற்றுகொண்ட நட்பு கூட இருந்தது.

அது மட்டுமல்ல  தங்களின் காதலை  நம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் உண்டு. . மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமுடியாத  விழயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர்களும் உண்டு . அது போல்  என்னை சார்ந்தவர்களுக்கு  தெரியாத என்னை பற்றிய  இன்னொரு பக்கத்தை  தெரிந்த நண்பர்கள் உண்டு . நட்பு இல்லையென்றால் உலகம் அழிந்திருக்கும் , நட்பு புனிதமானது  என்றெல்லாம் வசனம் பேசிய பருவமிது.

அத்தனை நட்புகளும்இன்று தொடர்கிறதா. ஏதோ ஒரு காரணத்திற்காக , கால மாற்றத்தினால், இட மாற்றத்தினால், குண மாற்றத்தினால்  பதவி மாற்றத்தினால்  சிறு சிறு மனத்தாங்கல்களால் , புதிய நட்பு கிடப்பதால்
எதை எல்லாம் உயிர் நட்பு என்று   நினைத்து இருந்தோமோ  அவை எல்லாம்
நீர்க்குமிழி மாதிரி தானே.

அப்போது உண்மையான நட்பே இல்லையா.  இருக்கிறது  அது ஆத்மார்த்தமானது . இத்தனை வயதில்  யோசித்து பார்த்தல்  ஒரு பத்து உயிர் நண்பர்கள் தேறுவது கடினம்.  ஆனால் எண்ணற்ற நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஒரு சிலரே  மனதில் அழுத்தமானவர்களாய்  அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்கள் வெகு தூரத்தில் இருக்கலாம் , நம்மை  காரணமின்றி வெறுப்பவராக இருக்கலாம் . சில நிர்பந்தங்களுக்காக  நம்  நட்பை  விலக்கும்  கட்டாயத்தில் இருக்கலாம் .
   
சிறு வயதி ல்   என்சகோதரனை  அவனது ஆசிரியர்   தோழன் என்பவன் யார்
என்று கேள்வி கேட்க  அதற்கு அவன்     நம்ம கூடவே வருவானே  அவன்தான் சார்னு  என்று   சொன்னது  இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

இதோ நண்பர்தின வாழ்த்து அட்டைகளையும்  கைபட்டையும்  வாங்க இளைஞர்கள் குழு குழுமி இருக்கிறது   சில  வருடங்கள் கழித்து பார்த்தால் எத்தனை  நண்பர்கள்  இதே உணர்வுடன் இருப்பார்கள் என்று நினைக்கும் போதுஒரு மெலிதான புன்னகை  தவழ்கிறது /  அதிலிருந்து ஒரு குரல்  அங்கிள் உங்களுக்கு இதெல்லாம் புரியாது  என்று குரல் கொடுத்தது.


இத்தனையும்  தாண்டி நீண்ட வருடங்களாக  நண்பர்களாக  இருக்கிறோம் என்று சொல்லும் நண்பர்களுக்கு  சிறப்பு நண்பர்தின வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

1 comment: