Friday, September 11, 2015

baarathi

பாரதி  என்னை மன்னிப்பாயா ??

 உன் பாடல்கள்  எனக்கு மிகவும் இஷ்டம்.  எனக்கு மட்டுமா  உரை வீச்சாலர்களுக்கு , பட்டி மன்ற பேச்சாளர்களுக்கு ,  பள்ளி கல்லூரிகளில்  மாறு வேட போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு , அனல் பறக்க ஆவேசமாய் பேசும் அரசியல்வாதிகளுக்கு  எல்லோருக்கும் தான்.

பாரதி ,பெண்ணுரிமை  தேச பக்தி  இன்னும் பலவற்றிக்கு  நீ  BRAND AMBASAADOR   ஆக பயன்படுகிறாய் . அப்போதுதான் கைதட்டல்கள்  அதிகம் கிடைக்கிறது .

உன் வரிகளை நான் உச்சரிக்கும்போதெல்லாம் , அந்த வரிகளுக்கும் நடைமுறைக்கும் துளி கூட சம்பந்தமில்லை என்பது  மட்டும் அல்ல  முரணாகவும் இருக்கிறது .

காணி நிலம் வேண்டும் என்று பாடினாய்   இப்போது ஏக்கர் ஏக்கராக நிலம்    களவாடப்படுகிறது  அல்லது காயடிக்கப்படுகிறது.

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பினர்
வாராது போல வந்த மாமணியை தோற்போமா   என்று  உணர்சிகரமாக பாடும்போது   தாராள  மயமும்   அந்நிய மூலதனமும்   தோற்போம் போலிருக்கிறதே  என்று  எண்ண  தோன்றுகிறது  பாரதி. .

பாரதி  வெள்ளை நிறத்தில் ஒரு பூனை  எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பாடல் வரிகள் ஞாபகம் இருக்கிறது ?  அதை நீ பாடிகொண்டே வரும்போது
வண்ணங்கள் மாறுபட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை  ஒரு வரி வரும்  அதை நான் நினைக்கும்போது  மனதில் சிறு மின்னல் போல ஒரு எண்ணம் . இப்போது வண்ணங்கள்   ஆன்மீகம  அரசியல்  சாதி  என்று  தங்களை நிறமாக அடையாளப்படுத்தி  கொள்கிறது.

இன்னும் என்னென்னமோ தோணுது பாரதி .  அஞ்சி அஞ்சி  சாவர் அவர் அஞ்சாத பொருளில்லை  என்று நீ பாடினாயே  அது எனக்குத்தான்.  என்ன செய்வது  முக நூலில் எழுதினால் கூட மு ஜாமீன் கிடைக்குமா என்று பார்த்து  எழுத  வேண்டி இருக்கிறது. .

 பாரதி  இன்று நடந்த சம்பவம் ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.  காலை
கடைக்கு சென்ற போது  ஒரு  பதின்  வயது  பெண்  பொருட்கள் வாங்கிய பிறகு எவ்வளவு என்று கடைக்காராய்   கேட்க   அவர்  முப்பத்தி இரண்டு  ரூபாய் என்று சொல்ல  அந்த பெண் திரு திரு என்று விழித்து  பின் மெதுவாக
அப்படீனா எவ்வளுவு அங்கிள்  என்று கேக்க   அருகிலிருந்த ஒரு நண்பர்
தர்ட்டி டூ  ருபீஸ் என்ற. உடனே அந்த பெண்  ஓ  தர்ட்டி டூவா  சாரி அங்கிள் என்று  சொல்லி பணத்தை கொடுத்தது.

மெல்லத்தமிழ் இனி சாகும் என்று சொன்னாயாமே    நீ சொன்னதில் இது  ஒன்றுதான்  உடனே நடக்கும் போல் இருக்கிறது.

இப்படி எல்லாம் எழுதியதிற்கு  என்னை மன்னிப்பாயா   பாரதி. 

No comments:

Post a Comment